மைத்திரியின் கருத்து கடும் இனவாதத்திற்குரியது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து கடும் இனவாதத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜெனிவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்தானது கடும் இனவாதத்திற்குரியது. இதனை நன்கு உணரமுடிகின்றது.

ஜனாதிபதி மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே அவருக்கு மக்கள் வாக்களித்தனர். பாதிக்கப்பட்ட தமக்கு நீதி வழங்குவார் என தமிழ் மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்தனர்.

எனினும், இன்று அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் அமைப்பை மீறி எந்தவொரு நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது