ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம்!

ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஊடகவியலாளர்களிடத்தில் தர்மம் இருந்தாலும் ஊடகத்தில் தர்மம் இருக்க வேண்டும். இரண்டும் சமாந்திரமாக இருக்கும் போதுதான் இந்த நாட்டில் சமாதானம், சகவாழ்வு, சமத்துவம், பொருளாதாரம் சரியாக அமையப்பெறும்.

சில ஊடகவியலாளர்கள் தங்களது மனச்சாட்சிப்படி செய்திகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும், பேசுவதற்கும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கின்றோம்.

இந்த நாட்டில் 30, 40 வருடங்கள் யுத்தம் நடைபெற்றுள்ளன. இன்றும் இதன் வடுகள் மாறவில்லை. இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது முஸ்லிம், சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே எதிர்வரும் காலத்தில், நல்ல கலாசார ஒழுக்கமுள்ள, ஆற்றலுள்ள ஒற்றுமையான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதுடன், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கிறது.

எனவே இவ்விடயத்தில் ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி செயற்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.