விசேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும்!

விசேட தேவையுடையோருக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அரசு பின்னிற்க கூடாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கதிரவன் விசேட தேவையுடையோர் அமைப்புக்கு சுயதொழிலுக்கான முதற்கட்ட உதவியை இன்று (புதன்கிழமை) வழங்கி வைத்து, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முப்பது வருட கால யுத்தத்தினாலும், ஏனைய காரணங்களினாலும் பலர் விசேட தேவையுடையோர்களாக மாற்றப்பட்டு எம்மத்தியில் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களையும் எமது சமூகத்தில் இணைத்து பயணிக்க வேண்டும்.

அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள சுயதொழிலினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனகள் முன்வர வேண்டும்.

அரசாங்கம் பாதீட்டில் அவர்களுக்கு தனியான ஒதுக்கீடுகளை ஒதுக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும்.

அதனைப் பெறுகின்ற பயனாளிகளும் அதனை உதாசீனம் செய்யாமல் அவ்வுதவியில் இருந்து வளர்ந்து தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி சமூகத்திற்கு ஓர் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும்” என அவர் இதன்போது தெரிவித்தார்.