நடிகர் ரயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயன் விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா வைத்திருந்தமை உள்ளிட்ட விசாரணை தொடர்பிலேயே, அவர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரயன் வென் ரோயன் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு நேற்று (O4) காலை துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலை 5.25 மணியளவில் UL 226 ஶ்ரீலங்கன் விமான சேவைக்குரிய விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் 18 மணித்தியாலம் விசாரணை செய்திருந்தனர்.

துபாயில் ஆடம்பர ஹோட்டலொன்றில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மாகந்துர மதூஷ் உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் 4 தடவைகளில் 13 பேர் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 3 பேர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.