காதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொலை செய்த இளைஞன்!

திருச்சூரில் காதலிக்க மறுத்த இளம்பெண்னை பெற்றோல் ஊற்றி கொன்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் நீது (வயது-22). அதே பகுதியில் உள்ள வடக்கேகோட்டையை சேர்ந்தவர் நிதிஷ் (வயது-24).

நீதுவை பல நாட்கள் பின் தொடர்ந்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் நீது மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு அந்தபெண்ணின் வீட்டிற்கு குறித்த இளைஞன் சென்றுள்ளார்.

அந்த பெண்ணை தனியே அழைத்து தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். காதலிக்க முடியாது என்று அந்தபெண் உறுதியாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த இளைஞன், தான் மறைத்து வைத்திருந்த பெற்றோலை பெண்ணின் மீது ஊற்றி தீயை பற்றவைத்தார்.

இந்நிலையில், துடிதுடித்த அந்தபெண் அலறி சத்தம்போட்டார். பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் குறித்த இளைஞனைப் பிடித்து திருச்சூர் பொலிஸில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.