20 மாவட்டங்களில் கடும் வரட்சி!

31,931 குடும்பங்கள் பாதிப்பு ; வடமாகாணம் அதிகளவு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த மூன்று மாதமாக நிலவிய வரட்சியால் 20 மாவட்டங்களில் 31,931 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 642 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு மாகாணமே கடுமையான வரட்சியை எதிர்நோக்கியுள்ளது. வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மாத்திரம் 10,110 குடும்பங்களைச் சேர்ந்த 33,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தின் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. அத்தோடு மத்திய மாகாணத்தில் 8,300 குடும்பங்களைச் சேர்ந்த 30,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 4,057 குடும்பங்களைச் சேர்ந்த 13,520 பேரும் தென் மாகாணத்தில் 1,192 குடும்பங்களைச் சேர்ந்த 4,877 பேரும் ஊவா மாகாணத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரும் வடமேல் மாகாணத்தில் 7,943 குடும்பங்களைச் சேர்ந்த 28,293 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1,286 பேரும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கு உரிய நிவராண நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, நாடு முழுவதும் கடந்த மூன்று மாதகாலமாக நிலவும் வரட்சியால் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம், குருணாகலை, கொழும்பு, களுத்தறை, கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மொணராகலை, கிளிநொச்சி, திருக்கோணமலை, அநுராதபுரம், பொலனறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரட்சி நிலவி வருவதாக தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், பகல் நேரங்களில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதால் உடல்சார் பல உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.