சி.வி. மூடி மறைத்த விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளன!

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் எண்ணெய் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அந்த அனல் மின்நிலைய நிறுவனமான நொதேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக போராடடத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராட்டத்தை முடக்க தாம் ஆய்வு செய்வதாக கூறி அதற்கு பெருமளவான நிதியையும் செலவழித்தனர்.

அதன்பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசுக்கள் எவையுமே இல்லை என அறிக்கையையும் வெளியிட்டார்.

அவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது என்பதுடன் அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல தடவை கூறியிருந்தேன். ஆனாலும் அவர்கள் நான் சொல்வதற்கு மறுப்புக் கூறி வந்தனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இந்த இருவரினதும் மோசடிகள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளியில் வந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.