கொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது!

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று இடம்பெற்ற (05) ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி, மாணவர்களை வழிநடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை சட்டவிரோதமாக ஒன்று௯ட்டி, வீதியை மறித்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 20 வயதுடைய குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று (05) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஒன்றிணைந்த மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் நகரப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள், புத்தளம் -கொழும்பு முகத்திடல்வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

அத்தோடு, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மீதான இரண்டாம் வாக்கெடுப்புக்கு எதிராக சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

குறித்த மாணவர்கள் புத்தளம் -கொழும்பு முகத்திடலில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமையால் சில மணிநேரம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.