பிரமிட் முறை நிதி நிறுவனங்கள் வடக்கில் மீண்டும் தலையெடுப்பு

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, இத்தகைய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து, பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள சுமார் 140கோடி ரூபா பெறுமதியான நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது தற்போதைக்கு எந்த நிலையினை எட்டியிருக்கின்றது

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட்டு, இத்தகைய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும்.

அத்துடன் எமது மக்களின் பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளை எமது மக்கள் எட்டிக் கொள்வதற்கென எமது பகுதிகளில் இருக்கின்ற வளங்களைக் கொண்டதான உற்பத்திக் கிராமங்களை அமைக்க வேண்டியதன் அவசியம் நிலவுகின்றது.

இத்தகைய உற்பத்திக் கிராமங்கள் சிறு தொழில் முயற்சிகளாக கூட்டுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படத்தக்க ஏற்பாடுகளாக வலுப்பெறுமாயின் அது எமது மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.