அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை களமிறக்குவோம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மேலும், தேசிய அரசாங்கம் எனும் கொள்கைக்கு இனிமேல் ஐக்கிய தேசிய கட்சியில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு மலையக மக்களின் வாக்குகளும் பிரதானக் காரணியாக இருக்கிறது. இவர்களது வாக்குகள் கிடைக்காவிட்டால் தற்போது அரசாங்கம் அமைந்திருக்காது.

இதேபோல், எதிர்காலத்திலும் நாம் அர்ப்பணிப்புடன் வேலை செய்தால், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது மத்திய நெடுஞ்சாலைக்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒரு மணித்தியாலத்தில் கண்டியிலிருந்து கொழும்புக்கு பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.

இதனை தற்போது நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் 71 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகிறது.

எதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். இதுதொடர்பாக நாம் என்றும் கவலையடையப்போவதில்லை. நாம் தொடர்ச்சியாக மக்களுக்கான சேவைகளை செய்துகொண்டே இருப்போம்.

எனினும், நாம் இவற்றை வெளியில் பிரசாரங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதில்லை. இதுதான் எமது குறையாக இருக்கிறது.

எமக்கு மக்கள் பலம் தேவைப்படுகிறது. மக்களின் ஒத்துழைப்புக்கள் இருந்தால் மட்டுமே அரசாங்கத்தினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச்செல்ல முடியுமாக இருக்கும்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சூழ்ச்சி குறித்து அனைவருக்கும் தெரியும். இதனால், அடுத்து அமையவுள்ள அரசாங்கமானது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சில சம்பவங்களினால் அரசாங்கத்தில் தற்போது சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனாலேயே நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம். நாம் இப்போதே தேர்தல்களுக்கு தயாராகி வருகிறோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை இதற்காக நாம் களமிறக்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.