இந்திய மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் தீர்மானம்!

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், சிறைபிடிக்கப்பட்ட 360 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாடு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தனது தண்டனைக்காலத்தை சிறையிலேயே நிறைவு செய்தவர்களையே இவ்வாறு விடுதலை செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மீனவர்களை, நான்கு கட்டங்களாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பகை அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.