மறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

மறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வின் இறுதி போட்டியில் உதயதாரகை மற்றும் உருத்திரபுரம் விளையாட்டு கழகம் ஆகியன மோதின.

போட்டியில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் உதயதாரகை அணி இவ்வாண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

கிளிநொச்சி 7வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவி பிரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேற்றி கேடயத்தை வழங்கி வைத்தார்.

குறித்த கிண்ணத்திற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 34 கழக அணிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

நிகழ்வின் இடைவேளையின்போது படையினரின் பெரேரா நிகழ்வும் மைதானத்தை அலங்கரித்தது. கிளிநொச்சியில் முதல் முதலாக தீயுடனான கண்காட்சி குறித்த நிகழ்வில் இடம்பிடித்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவி பிரிய குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 45 கழகங்கள் உள்ளன. இவற்றில் 34 கழகங்களே இந்த போட்டியில் பங்கு பற்றின.
விளையாடிய அத்தனை அணிகளும் திறமையாக தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மிக சிறப்பாக வெளிப்படுத்திய அணிகளிற்கு மேலும் பயிற்சிகளை வழங்கி கொழும்பிற்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில் குறித்த விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு மற்றும் சில வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு தாம் முன்வருவதாகவும் இதன்போது ரவிபிரிய கழகத்தினரிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.