அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில்வே ஊழியர்கள்!

ஒன்றினைந்த ரயில்வே தொழிற்சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். .

சம்பள பிரச்சினை, புதிய ஆட்சேர்பு நியமணம் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி இப்பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல உத்தேசித்துள்ளதாக ஒன்றினைந்த ரயில்வே தொழிற்சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரயில் சேவையில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் மற்றும் கேள்விகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சிடம் பலமுறை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் எவ்வித தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை.

இதன் காரணமாகவே நாளை முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டது.

சித்திரை புத்தாண்டில் பயணிகளின் நலன் கருதியே குறுகிய நேரத்திலான பணிப்புறக்கணிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் ரயில் சாரதிகள் சங்கம், நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் மற்றும் மூன்றாம் தரப்பு சேவையாளர்கள் சங்கம் ஆகியவை ஒன்றினையவுள்ளன.

அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது போலியான வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றமையினால் எவ்வித அறிவித்தலும் இன்றி போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம்.

அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இப்போராட்டம் இரு நாள் இடம்பெறும் 11ம் திகதி தொடக்கம் சித்திரை புத்தாண்டு முடிவுறும் வகையில் போராட்டம் இடை நிறுத்தப்படுவதுடன், அதன் பின்னர் தீர்வு கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.