நாங்கள் காய்க்கும் மரம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைகளுக்கு ஏற்றவாறே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாம் காய்க்கும் மரம். இதன் காரணமாகவே அரசாங்கம் எமது நடவடிக்கையை விமர்சிக்கின்றனர். ஜனாதிபதியின் அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காலையில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்து விட்டு மாலையில் ஆதரவாக வழங்கியது. அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

ஆகையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைகளுக்கு ஏற்றவாறே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.