ரூபா 200 மில்லியன் முதலீட்டில் யாழ்ப்பாணத்தில் உப்பு உற்பத்தி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது.

அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் லண்டன் முதலீட்டாளர் கந்தையா பிரேமதாஸ் மற்றும் ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவனமும் இணைந்து, சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வி.சகாதேவனின் ஆலோசனையில் கீழ் உருவாக்கப்பட்டது.

“இந்த உப்பள உற்பத்தி நிறுவத்தின் முதற்கட்ட நடவடிக்கை 100 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகள் போரின் போது வடமாகணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்த பின்னர் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், வடமாகாணத்தில் போர் நிறைவடைந்த பின்னர் அண்மையில் லண்டன் வாழ் முதலீட்டாளர் பிரேம்தாஸ் 200 மில்லியன் ரூபா நிதியில் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டு உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி செய்வதற்கான பாத்திகள் அமைக்கப்பட்டு, அங்கு 100ற்கும் மேற்பட்ட இளையோருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

உப்பு உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுச் சூழல் மாசடையாத வகையிலும் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது” என்று சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கூறினார்.

ஆரம்ப நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், ஹற்றன் நஷனல் வங்கியின் மூத்த பிராந்திய முகாமையாளர் எம்.டேமியன் ரஞ்சித், பிரதேச கிராமிய வங்கி உதவித் திட்ட முகாமையாளர் கே.தியாகராஜா உள்பட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.