மஹிந்தவின் விருந்தோம்பலில் கலந்துகொண்டவர்கள் தமிழரை காப்பாற்றவில்லை!

இலங்கையில் இடம்பெற்ற ஈழப் போரின்போது தி.மு.க. – காங்கிரஸ் அரசோ அல்லது கனிமொழியோ தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாநகரில் நேற்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சார்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்த கனிமொழி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விருந்தோம்பலில் கலந்துகொண்டார்.

ஆனால் தமிழர்களைப் பாதுகாக்க எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோதுதான் இலங்கையில் தமிழர்கள் அந்நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி போரை நிறுத்த உண்ணாவிரத நாடகமாடினார். இலங்கை இராணுவத் தாக்குதலை நிறுத்த தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.