மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து போராட்டம்!

‘மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்’ எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் தலைமையில் குறித்த அமைதி போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மத ரீதியான பிணக்குகள் இனியும் வேண்டாம் எனவும் மதம் எனும் அடையாளத்திற்காக எமது உரிமைக்காக நாம் சண்டையிட்டு பிரிந்து விடக்கூடது எனவும் கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மன்னார், மடு, மாந்தை, முசலி,  நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆண்டாண்டு காலமாக கட்டியெழுப்பப்பட்ட எமது ஒற்றுமை சில மத ரீதியான காரணங்களுக்காக தகர்க்கப்படக்கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் மத ரீதியிலான பிரச்சினையை அடையாளப்படுத்தி மன்னார் மாவட்டத்தை பிரித்து விடாதீர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

‘மதங்களையும் மத தலங்களையும் மதிப்போம்’, ‘மதங்களை கடந்த மனித விழுமியங்களை மதிப்போம்’,  ‘மன்னார் மண்ணில் மதங்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்போம்’ போன்ற பல்வேறுபட்ட மத ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலான வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.