பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவதற்காகவும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பண்டிகைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஊடகங்களை தெளிவுப்படுத்துவதற்காக இன்று (புதன்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 2400 பொலிஸார் மேலதிகமாக கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் மாத்திரம் 800 பொலிஸார் மேலதிகமாக சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் சிவில் உடையிலும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மதுபாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுப்பிடிப்பதற்காக 25 ஆயிரம் பரிசோதனை கருவிகள் எடுத்துவரப்பட்டுள்ளது.

மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.