இந்திய நாடாளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

இந்திய மக்களவை பொதுத் தேர்தல் இன்று 11ம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 வரை ஏழு கட்டங்களாக நாடெங்கும் நடைபெறுகிறது.

ஏழு கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே மாதம் 23 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்கள் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க ‘சங்கல்ப் பத்ரா’ எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்டதாக மேற்படி தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

2014 பொதுத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றியைப் பெற முக்கிய காரணமாக இருந்தது அப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை ஆகும்.

2014ஆம் ஆண்டு பா.ஜ.க தனது 52 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 549 உறுதிமொழிகளை அளித்தது. ‘ஏக் பாரத், ஷ்ரெஸ்தா பாரத்’ என்ற தலைப்பில் வெளியானது அன்றைய தேர்தல் அறிக்கை. ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்பது இதன் பொருள் ஆகும்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பா.ஜ.கவின் 45 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 75 உறுதிமொழிகள் உள்ளன.

‘சங்கல்பித் பாரத், ஷசாக் பாரத்’ என்று முகப்பில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் அறிக்கை. ‘பாரதத்திற்கான உறுதிமொழி’ என்று அது சொல்லப்படுகிறது.

2014 பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்கும் இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைக்குமான வித்தியாசம் அட்டைப்படத்தில் இருந்தே தொடங்குகிறது.

2014 அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோசி ஆகியோர் படங்கள் இடம்பெற்றிருந்தன.

அட்டைப் படத்தின் கீழே மோடி, மனோகர் பரிகார், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

ஆனால், இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நரேந்திர மோடி ஒருவரின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் அட்டைப் படத்தில் மக்கள் கூட்டத்தை வைத்துள்ளது.

இந்திய தேர்தல் அருணாச்சல மாநிலத்தில் இன்று ஆரம்பமாகின்றது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு நாட்கள் உள்ளன.