கிளிநொச்சி அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் வீதிகளை குடைந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த சம்பந்தப்படட தரப்புக்கள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஸ்கந்தபுரம் பகுதியில் குடியிருப்பு வீதிகளில் தொடர்ந்தும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் அக்கராயன் குளத்திற்கான நீரை சேர்க்கும் ஆற்றினையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, பகல் வேளைகளில் உழவு இயந்திரங்களில் ஏற்றப்படும் மணல் கெங்காதரன் குடியிருப்பு, கரித்தாஸ் குடியிருப்பு போன்ற பகுதிகளில் ஆட்களற்ற காணிகளுக்குள் மணல் குவிக்கப்பட்டு இரவு வேளைகளில் டிப்பர் வாகனங்களில் ஏற்றி வெளியிடங்களுககுக்கொண்டு செல்லப்படுகின்றது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வுகளால் பிரதேச வீதிகள் மற்றும் பிரதான வீதிகள் மிக மோசமாக சேதமடைகின்றன.

இவ்வாறு இடம்பெறுகின்ற மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு பலராலும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றது.

ஆனால், இதுவரை இதனைக்கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கிராம மட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக, அக்கராயன் குளம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள 200 மீற்றர் தொலைவிலுள்ள கெங்காதரன் குடியிருப்பு கரித்தாஸ் குடியிருப்பு என்பவற்றில் தினமும் இரவு வேளைகளில் டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச்செல்கின்றது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணலைக்கூட பொலிசார் கட்டுப்படுத்த முன்வருவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள பிரதேச மக்கள் இவ்வாறான சட்டவிரோதமான மணல் அகழ்வுகளைத்தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.