தடை செய்த ஓமந்தை அம்பாள் வீதி தற்காலிகமாக திறந்துவைப்பு.

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலையீட்டினால் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

அதையடுத்து மார்ச் மாதம் 5ஆம் திகதி புகையிரதத் திணைக்களத்தினால் தண்டவாளங்கள் போட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வீதி தடை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவ்வீதியை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

எனினும் இன்று காலை அவ்வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நேற்று மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக சிங்களத்தில் எழுதப்பட்ட கடித மூலம் புகையிகையிரத திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் புகையிரதத் திணைக்களத்தின் ஊழியர்களினால் அவ்வீதி திறக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்கள் இவ்வீதியை தற்காலிகமாக திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் இவ்வீதியை நிரந்தரமாக மக்களின் போக்குவரத்திற்கு திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.