நுண்கடன்களே மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன!

நுண்கடன் சுமையினாலேயே மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கிராம சக்தி ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தின் அனுசரணையில் கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழுள்ள சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒருகோடியே 28 இலட்சம் ரூபாய் சுயதொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதனை மீளச் செலுத்த முடியாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை நாம் அவதானித்துள்ளோம்.

மக்கள் இவ்வாறு கடன் நச்சு வட்டத்திற்குள் விழுகின்றபோதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கடன்களைப் பெற்ற மக்கள் அதனை மீளச் செலுத்த முடியாமல் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்ட நிலையையும் நாம் அவதானித்துள்ளோம்.

இவ்வாறான நிலையிலிருந்து எமது மக்களை கைதூக்கி விடும் நோக்கில் தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக மக்களுக்கு தொழில் முயற்சிக் கடன்களை வழங்கி வருகின்றோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் எமது மாவட்டம் மிகவும், வறுமையை மாவட்டமாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூட்டுறவு அமைப்புக்கள் சமூக பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துவரும் அமைப்பாக மிளிர்கின்றன.

கடந்த காலங்களில் இவ்வமைப்புக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு இயங்க முடியாமல் இருந்தன. ஆனால் தற்போது சகல கூட்டுறவு அமைப்புக்களும், புத்துயிர் பெற்று செயற்பட்டு வருகின்றன.

இலங்கையில் எந்த நிதி நிறுவனங்களும் வழங்காத வட்டிவீதமாக அதாவது 8 வீத வருடாந்த வட்டி வீதத்திற்கு நாம் மக்களுக்கு இக்கடன் உதவிகளை வழங்கிவருகின்றோம்.

கூட்டுறவு நிதியில் அதிகளவு பயனாளிகளுக்கு கடனாக வழங்கிய சந்தர்ப்பம் இதுவாகத்தான் உள்ளது. இந்த நிதியை மக்கள் எக்காரணம் கொண்டும் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

உங்களது சுயதொழில் அபிவிருத்திக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.