கோடிக்கணக்கு பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது!

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார்.

இவர், நான்கு கிலோ கிராம் எடையுடைய சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்டுள்ளார்.

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்க பிஸ்கட்டுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய மேலும் தெரிவித்தார்.