வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்விலிருந்து த.தே.ம.முன்னணி வெளிநடப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்விலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வு இன்று வெியாழக்கிழமை) நெடுங்கேணி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சபையின் தலைவர் ச.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையில் கடந்த கூட்டறிக்கை முன்வைக்கப்பட்ட போது அவ்வறிக்கை தவறானது என ஒரு சில உறுப்பினர்கள் தெரிவித்ததால் அறிக்கையானது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன் போது பதினான்கு உறுப்பினர்கள் இக்கூட்டறிக்கை பிழையானது என வாக்களித்தமைக்கு அமைவாக அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன்பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சஞ்சுதன், தங்களது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும் தங்களது வட்டாரத்திற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன் தவிசாளர் பக்கச்சார்பாக செயற்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் தவிசாளருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதையடுத்து சபை நடவடிக்கையில் இருந்து தாம் வெளியேறுவதாகக் கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வி.சஞ்சுதன், நிரஞ்சினி, விஜிகரன் ஆகியோர் சபையை விட்டு வெளியேறினர்.