மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல்: 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட இல்லை!

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டலால் 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ஒடிசாவில் உள்ள மலகன்கிரி பகுதி மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. தேர்தலை சீர்குலைக்க அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருந்ததால் அங்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்டுகள் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனால், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் மக்கள் வாக்களிக்க அச்சப்பட்டனர்.

மல்கன்கிரியில் பல வாக்குச்சாவடிகளில் குறைவான அளவே வாக்குகள் பதிவாகின. குறிப்பாக 2 வாக்குச்சாவடிகளில் ஒரே ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.