ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி தோல்வியடைவார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக தோல்வியடைவாரென டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை, ஜனவரி 8ஆம் திகதி புதிய ஜனாதிபதியொருவர் பொறுப்பேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு மேலம் தெரிவித்த அவர்,

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நிச்சயமாக 2020 ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றது.

இது குறித்து நீதிமன்ற ஆலோசனையை நாடுவது ஜனாதிபதியின் உரிமையாக கருதப்படுவதுடன் அது நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகவும் அமையும் என தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிகாலம் குறித்து அவர் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அத்தகைய அபிப்பிராயத்தை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாக புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி தயாசேகர கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலைக்கண்டு தற்போது சுதந்திரக் கட்சி பின்வாங்குவதையும் அதற்கான வியூகங்களை வகுப்பதையும் காணக்கூடியதாக உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.