புத்தாண்டை முன்னிட்டு 10,872 உணவகங்கள் பரிசோதனை!

2,821பேருக்கு வழக்கு; 21 இடங்களுக்கு சீல் வைப்பு

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உணவகங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 2,821வர்த்தகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகவும் 21உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களை பொது சுகாதார அதிகாரிகள் உணவு மற்றும் மருந்து பரிசோதனை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து சோதனையிட்டுள்ளதுடன் இதன்போது 10,872ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது 21உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் 2,821வர்த்தகர்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலமும் 614வர்த்தகர்களுக்கு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் இந்த வேலைத் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதில் 1,700பொது சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் 50உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர்.

பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் உணவு தயாரிக்கப்படுவதற்காக உபயோகிக்கப்படும் பொருட்கள் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவை இதன்மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அவர்கள் 1,412சுற்றிவளைப்புகளை மேற்கொண்டன. சுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை உணவு பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது ஹோட்டல்கள், தூர பிரதேசங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் ஹோட்டல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்க ப்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.