சதி செய்யும் இனவாதிகள்: சர்வமத தலைவர்கள் கண்டனம் !

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்முனை நகரில் நேற்று மாலை ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக தெரிவித்து கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 7ஆம் திகதி ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பான கடிதத்தில் கல்முனையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பிரதேச செயலகம் தொடர்பாக ஊடக மாநாட்டிற்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டிருந்தது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என கல்முனை மறுமலர்ச்சி கழகம் குறிப்பிட்ட சொற்பதம் கல்முனை நகரில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிளர்ச்சியை தோற்றுவிக்கும் என்பதனடிப்படையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்து அந்த ஊடக மாநாட்டிற்கு தடையுத்தரவை பெற்றிருந்தார்.

30 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அரச திணைக்களமான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்ட யார் இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது?

பிரதேச செயலாளர், உப செயலாளர் 250 மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கும் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளவர்கள் சட்டவிரோதம் என்பதனூடாக இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் விதமாக செயற்படுவது தமிழர்களது மனங்களை புண்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் சுற்று நிரூபங்களுக்கு ஏற்ப இயங்கி வரும் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தடையாக இருக்கும் குறுகிய மனம்கொண்ட சிலர் சட்டவிரோத பிரதேச செயலகம் என்பதனூடாக தங்களது வாக்கு வங்கியை பாதுகாக்கவே முயல்கின்றனர்.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிடுமோ எனும் அச்சத்தில் குழப்பும் நோக்கிலே மறுமலர்ச்சி கழகம் ஊடக சந்திப்பினை மேற்கொள்ள எத்தனித்ததாக சர்வமத தலைவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.