அமைச்சுப் பதவிகளைப் பெறுவதன் மூலமே இருப்பை பாதுகாக்கலாம்!

மாகாண மற்றும் மத்திய அரசுகளில் அமைச்சுப் பதவிகளையும் அதிகாரங்களையும் பெறுவதன் மூலமே கிழக்கில் தமிழ் மக்கள் இருப்பினை பாதுகாக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், உரிமைசார்ந்த விடயங்களுடன் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் சமாந்தரமாக கொண்டுசெல்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தின் இருப்பினையும் வளத்தினையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பேட்டைகளை அமைப்பதில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் கிழக்கினை நேசிப்போருடன் இணைந்து ஒரு கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இணங்கினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதில் இணைந்துகொள்ளலாம் எனவும் வியாழேந்திரன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை யார்மீது ஏற்படுகின்றதோ அவர்களை நாங்கள் ஆதரிக்கும் சூழல் உருவாகும். தேர்தல் காலங்களில் அது தொடர்பான தீர்மானங்களை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் மகிந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கடத்தல்கள், படுகொலைகளை மறுக்கவில்லை. அதனை இன்றும் கூறிவருகின்றோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் 150இற்கும் மேற்பட்ட இடங்களில் படுகொலைகளும் கடத்தல்களும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.