யாழ்ப்பாணத்தில் மதுபானம் கடத்திய இருவர் கைது!

இன்றையதினம் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி பியர் ரின்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை (13.04.2019) அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் நெல்லியடி நகர் ஊடாக சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது, பியர் ரின்கள் எடுத்துச் செல்லப்பட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து அதனை எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.