தேசிய இலக்குகளை அடைய ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

தேசிய இலக்குகளை அடைவதற்கு இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ், சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சித்திரை புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சித்திரை புத்தாண்டானது மனிதன் தனது சுற்றுச்சூழலையும் இயற்கையையும் வழிபடுவதற்கான வாய்ப்பாக அமைகின்றதென குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அறுவடை செய்த விளைச்சலை இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததன் பின்னர் தனது உபயோகத்திற்காக வைத்துக்கொள்வதனால் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர உறவுகள் விருத்தியடைவதுடன், மக்கள் தமது தேசிய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரை புத்தாண்டெனும் உயரிய கலாசார பண்டிகையானது, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலத்தில் அதைக்கடந்து இப்பண்டிகையின் உள்ளார்ந்த பண்புகளை புரிந்துகொள்ள முயற்சித்தல் அவசியமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இயற்கையின் குழந்தைகளாகிய நாமே இயற்கையை நமக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதி அதற்கு இடையூறு செய்திருக்கின்றோம் என தெரிவித்த ஜனாதிபதி, அதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றரக்கலந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதுவரை நாம் அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதோடு தேசிய இலக்குகளை அடைவதற்கு நாம் இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.