நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

வடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், தமிழ் மக்களுக்கானத் தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் செய்த தவறுகளை சரிசெய்ய தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அனைத்து வகைகளிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவதே எமது பிரதான நோக்கமாகும். நாம் மக்களின் பயத்தை நீக்கியுள்ளோம். இதுவே எமது பாரிய வெற்றியாகத் தான் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாவிட்டாலும், மக்களுக்கான ஜனநாயக உரிமையை அவர்களுக்கு முற்றாக வழங்கியுள்ளோம்.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவனைத்துக்கொண்டு, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.

இதனால், தேர்தல் தொடர்பில் நாம் அச்சப்படவில்லை. எமது கட்சி ஸ்தீரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிலர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதுதொடர்பிலெல்லாம் நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

கட்சி ரீதியாக நாம் ஒன்றுமையாடன் தான் இருக்கிறோம். அத்தோடு, தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதும் எமது முக்கியமான பொறுப்பாக இருக்கிறது.

இதனை நாம் தமிழர்களது பிரச்சினையாக அன்றி, தேசியப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறோம். இன்று வெள்ளை வேன் கலாசாரமோ கடத்தல் பயமோ இல்லை.

இந்த நிலையில், நாம் சில விடயங்களில் தாமதம் காட்டுவது நாட்டின் ஐக்கியத்திற்காகவே அன்றி, தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடாது என்றல்ல.

மேலும், இந்தப் பிரச்சினைக்கானத் தீர்வை நாம் இலங்கைக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில், சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை. இதனை நாம் சர்வதேசத்திடமே கூறிவிட்டோம்.