பணநாயகத்தைக் கொன்று புதிய ஜனநாயகத்தைப் படைப்போம்!

பணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தைப் படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள்.

அடுத்த தலைமுறைக்கு தூயஅரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடுவந்துள்ளோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை அடையாறில் (14ம் திகதி) மாலை, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடந்தது.

இதில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து உரையாற்றும்போது சீமான் இவ்வாறு தெரிவித்தார்.

நீங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்கை விக்கிறீர்கள்; அவர்களோ, உங்கள் வாக்கை வாங்கிக்கொண்டு நாட்டை விக்கிறார்கள் என்ற புரிதலுக்கு நீங்கள் வரவேண்டும்.

உயிரை இழக்கலாம்; ஆனால், உரிமையை இழக்கக்கூடாது. உயிரை இழப்பதென்பது தனிப்பட்ட இழப்பு; உரிமை இழப்பு என்பது ஒரு இனத்திற்கான இழப்பு, எதிர்கால தலைமுறைக்கான இழப்பு. அதை இழந்து விடாதீர்கள்.

பெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் வாரிசுகளை தேர்தலில் நிறுத்துகிறார்கள்.

நாங்களும் பணபலம், ஊடகவலிமை எதுவும் இல்லாத வாரிசுகள்தான்; எளிய மக்களாகிய உங்களின் வாரிசுகள், உழைக்கும் மக்களின் வாரிசுகள், வேளாண் பெருங்குடி மக்களின் வாரிசுகள்.

எங்களுக்கு வாக்களித்து வலிமைப் படுத்துங்கள். புத்தம் புதிய அரசியலை, ஒரு தூய அரசியலை இந்த நிலத்தில் இருந்து கட்டியெழுப்புங்கள்.

இந்த பணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தை படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள். அதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள் என் அன்பிற்கினிய சொந்தங்களே.

படித்த இளைஞர்கள், அறிவார்ந்த இளைஞர்கள், அடுத்த தலைமுறைக்கு தூய அரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிற இளைய தலைமுறையினரே, புரட்சியாளர்களே… உங்களை நம்பித்தான் உங்கள் மூத்தவர்கள் இந்த களத்தில் நிற்கிறோம்.

இந்த புரிதலோடு நீங்கள் வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அவர் தெரிவித்தார்.