கிளிநொச்சி விவேகானந்த நகரில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி விவேகானந்த நகர் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த கிராமத்தில் 2017ம் ஆண்டு உயர்தரம், 2018ம் ஆண்டு சாதரண தரம் மற்றும் புலைமைபரிசில் பரீட்சைகளில் தோற்றி சாதனை நிலைநாட்டிய மற்றும் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் 90 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 22 வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் உறவினர் ஒருவரின் உதவியுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பா.ம உறுப்பினர் சித்தார்த்தன் கலந்து கொண்டதுடன், முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த நிகழ்வில் திறைமையாக கற்பித்தலை மேற்கொண்டி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

இன்று எமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக யுத்தத்தினை குறிப்பிடலாம். யுத்த்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை பாடசாலை வளங்களும் இல்லாது அழிந்துள்ளன. இதன் காரணமாகவே கல்வியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நான் கூறுவேன்.

இன்று யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் ஐந்து வீதமானோரே இவ்வாறு உதவிகளை செய்கின்றனர்.

இவர்கள் போன்று ஏனையோரும் உதவ முன்வந்தால் எமது பிரதேசங்களில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

70ம், 76ம் ஆண்டுகளிற்கு முன்னர் கல்வி எவ்வாறு இருந்ததோ அதே போன்று முன்னிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாண முன்னால் விவசாய அமைச்சர் சிவநேசன் குறிப்பிடுகையில்,

மாணவர்களின் கல்வி இன்று மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது.

மாணவர்கள் பாடசாலை கல்விக்கு அப்பால் மாலை நேர கல்வியை நோக்கி ஓடுகின்றனர்.

பரீட்சைகளில் தோற்றி சாதித்த மாணவர்களிடம் உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என கேட்டபோது, பாடசாலை கல்வி மாத்திரமே என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் தமது கல்வியை கற்று யுத்த காலத்தில் வடமாகாணம் எவ்வாறு கல்வியில் முன்னிலையில் இருந்ததோ அதே போன்று முன்னுக்கு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.