திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24ம் இலக்க தேயிலை மலையிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தேயிலை மலையில் தொழில் செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்ததையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனைக்காக வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்துசென்றுள்ளதாகவும் காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச்சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.