புனித பூமி திட்டத்தின் கீழ் காணிகளை அளவிட முயற்சி

திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை அளவிடுவதற்கு நிள அளவை திணைக்களம் இழுத்தடிப்பதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள சாந்திபுர விகாரை, கந்தசாமி மலை, தென்னை மறவாடி, நாகலென விகாரை, அரிசிமலை, யான் ஓயா, அத்தனாசி, மிஹிந்து லேன், சப்த நாக பம்ப, மீ சத்தர்ம பிதஹி ஆகிய 9 விகாரைகளுக்கான இடங்களை அளவிட 2013ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டும் இன்னும் அளவிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புல்மோட்டை பௌத்த பிக்குகள் பெரும்பாண்மை நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக நாடாளுமன்ற விசேட கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சபாநாயகர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாரென தகவல் கிடைத்துள்ளதாக ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை பகுதிக்கு இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குவின் தலைமையில் நிள அளவை அதிகாரிகள், குச்சவெளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அறிக்கை சமர்பிப்பதற்கு சென்றுள்ளனர்.

குறித்த பகுதியை ஏற்கனவே புனித பூமிக்காக அளவிட முற்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர்.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும் மேலும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என ஆர்.எம்.அன்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பௌத்த விகாரைக்கான காணியை அளவிடுவதில் எவ்வித பிரச்சினையுமில்லை மாறாக பொதுமக்களின் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அளவிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.