தாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார்!

தாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார்!

தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை ஏற்படுமென்றால் எந்த எல்லைகளுக்கு அப்பாலும் சென்று சேவைபுரியத் தயாராகவே இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, செம்மலை மகா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆளுநர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“30 ஆண்டுகள் போருக்கு பின்னர் ஒரு தசாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற பெரும் பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம்.

ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும், அரசியல், அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொள்வது, வெவ்வேறு பகுதிகளில் நீங்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஒரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம், கட்டவேண்டியது ஒரு சமுதாயமாகும்.

ஆகையினாலே கட்டியமைக்கப்பட வேண்டிய அந்த சமுதாயத்திற்காக குறைந்தது குறிப்பிட்ட காலத்திலாவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகும்” என்று ஆளுநர் தெரிவித்தார்.