பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா?

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர்.

எனினும், கடல் வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சஹரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது மகள் மற்றும் சகோதரியின் மரபணுவை பரிசோதிக்க, அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக், சினமன் கிரான்ட் நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இன்ஷாப் அஹமட் ஆகியோரையும் அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் நடத்தப்பட்டுவரும் தேடுதலில் நாளாந்தம் வெடிபொருட்களும், பயங்கரவாதிகள் பயிற்சிபெற்றதாக கருதப்படும் இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.