ஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு

ஹற்றன், டிக்கோயா பகுதியில் இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன், டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டிருந்த குப்பை கூழத்தில் இருந்தே இராணுவ சீருடைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஹற்றன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் ஊழியர்கள், ஹற்றன் பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பை கூழத்தினை சுத்தம் செய்துள்ளனர்.

இதன்போது அதில் இராணுவ சீருடைகளான தொப்பி மற்றும் காற்சட்டை ஆகியவற்றை கண்ட ஊழியர்கள், ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இாணுவத்தினர் சீருடைகளை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை ஆடையகங்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான துணிகள், உடைகள் இருப்பின் அவற்றை அகற்றிவிடும் படியும் பொலிஸாருக்கு ஒப்படைக்கும்படியும் பாதுகாப்பு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் குப்பை கூழத்திலிருந்து இராணுவ சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.