யாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூதாட்டியின் வீட்டுக்கு நேற்று (திங்கட்கிழமை) காலை அவர்களது உறவினர்கள் சென்றபோது, அவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை சோதனையிட்டதோடு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.