துணை இராணுவக் குழுவும் தமிழ்த் தலமைகளும்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து இலங்கை அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் தருணத்தில் இலங்கையில் ஐஸ்.ஐஸ் தீவிரவாத கட்டமைப்புக்களை அடக்கும் நோக்கில் தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ் நடவடிக்கையானது சிறுபாண்மை இனத்தவர்களிடே மேலும் ஓர் முரண்பாட்டை ஏற்படுத்த அரசு வழிவகுக்கின்றது எனலாம்.

இலங்கை அரசாங்கமும் முப்படையினரும் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக முஸ்லிம் இளைஞர்களை புலனாய்வு துறையிலும் படைத்தரப்பிலும் இணைத்துக்கொண்டு தமிழர்களின் உரிமைபோராட்டத்தை நசுக்குவதற்காக முழுமையாக பயன்படுத்தப்பட்டார்கள் அத்துடன் கடந்த காலங்களில் தமிழ் இயக்கங்களை சேர்ந்த புளெட்,ஈபிடிபி,ரெலோ,ராசிக்குழு,சிறிரெலோ,ஈரோஸ்-பிரபா குழு,கருணா குழு போன்ற இயக்கங்களில் அங்கம் வகிக்கும் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் பணம் மற்றும் நிவாரணங்களை வழங்கி தமிழர்களை தங்களுக்குள்ளே மோதவிட்டது.

இது இவ்வாறு இருக்க தமிழரசுக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது இனக்குரோதங்களையும் பிளவுகளையுமே ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தார்.

இவ் விடயத்தை தமிழரசுக்கட்சி கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என்றே கூறலாம் காரணம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் மிதவாத தலைவர்களான செல்வா,அமிர்தலிங்கமும் அவர்களை தொடர்ந்து இன்றிருக்கும் மிதவாதா தலைவர்கள் என்று சொல்லக்கூடிய சர்வாதிகாரிகள் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தை பிரசவிக்க காரணகர்த்தாக்களாக இருந்தனர்.

1979ம் ஆண்டு ஜே.ஆர் இனால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை மௌனமாக இருந்து ஆதரித்த இவ் மிதவாத தலைவர்களினால்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கெடுபிடியினால் பல்லாயிரக்கணக்காண இளைஞர் யுவதிகள் படுகொலைசெய்யப்படவும் கைதுசெய்யப்படவும் காரணமாகமிருந்தனர். இவர்களின் இவ்வாறான இராஜதந்திரம்மற்ற செயற்பாடுதான் எம்மை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது. இன்று இவர்கள் தம்மை உத்தம சீலர்களாக காட்டிகொள்வது வேடிக்கையாக உள்ளது.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை செய்துவருகின்றனர், ஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை வாங்கிக்கொண்டு ஆதரவு அளித்தமை,ஐநா மனித உரிமை பேரவையில் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளை நீர்த்துப்போக செய்தமை,யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்கு இரட்டிப்பான தொகை ஒதுக்கப்படுகிறது என தெரிந்தும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை, சர்வதேச இராஜதந்திரிகளுடன் தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேசவேண்டிய நேரத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இருந்து இலங்கையை காப்பற்ற இராஜதந்திரிகளுடன் இரவோடு இராவாக பேச்சுவார்த்தை நடாத்தி அரசை காப்பாற்ற கடும் பிரயத்தனம் எடுத்தமை, போன்ற தவறுகளை இழைத்த இவர்கள் இறுதியில் அரசைக் காப்பாற்ற நீதி மன்றம் வரை சென்ற இவர்கள் இருபத்தேழு வருடகாலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஒரு நாள் கூட இவர்கள் நீதி மன்றம் செல்லவில்லை.

தமிழர்களின் அன்றாட பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை கொள்கைரீதியாக இருக்கவேண்டியவர்கள் தங்களுடைய சுயநலங்களிற்காகவும் அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இதைபார்கின்றபோது தமிழ் இராணுவ துணைக் குழுக்களை விட மோசமானவர்கள் இக் கூட்டமைப்பினரே எனத் தோன்றுகின்றது.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளை இராணுவம் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியது அதில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் தாங்கள் தமிழ் மக்களின் நலன்களுக்காக தான் ஆயுதம் ஏந்தி போராடினோம் என்றும் இவ்வாறு இராணுவக்குழுவில் இணைந்து பணியாற்ற தங்களால் முடியாது என மறுத்து விட்டனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விரோதமான செயல்பாட்டை ஆதரிப்பதற்காக மாதாந்தம் இரண்டுலட்சம் ரூபாவை இவர்களுடைய வங்கிக்கணக்கில் அரசாங்கம் வைப்பிலிடப்படுவதுடன் அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு பட்ட சலுகைகைளை பெற்றுக்கொண்டும் மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கௌரவம் என்ற போர்வையில் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.