ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்!

நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”ஜனாதிபதிக்கு எதிரான இன முறுகலை தோற்றுவிக்கக்கூடிய வகையிலான கடிதங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக எமது அமைச்சின் ஊடகத்தில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விடயத்தில் காண்பிக்கும் அக்கறையை, கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புலனாய்வுத் தகவல் வெளியானவுடன் மேற்கொண்டிருந்தால் 300 உயிர்களை இழந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

நீதி அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகத்தான் பொலிஸார் செயற்படுகிறார்கள்.

பியல் நிசாந்த, 11 இராணுவத்தை கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? அவரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை. அவர் எப்படி நாடாளுமன்றுக்கு வரலாம்” என கேள்வி எழுப்பினார்.