சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

சஹ்ரான் ஹசீமின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபருக்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரால் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வழங்கப்படவிருந்தது என சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அப்துல் மொஹமட் நியாஸ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி வழக்கின் அடுத்த விசாரணை இடம்பெறவுள்ளது. இதன்போது அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கோரி இந்த இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முக்கரவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே ஹொரவபொத்தான பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து லட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்குவதாக கூறியுள்ள சந்தேகநபர், அதில் ஒரு தொகை பணத்தை இன்றைய தினம் வழங்குவதாகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின் எஞ்சிய பணத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.