பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு!

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு!

பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சாதாரண ஒன்றாக எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இதனை குறுகிய காலத்தில் ஒருபோதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது.

இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களும் அரசாங்கத்துக்கு அவசியமாகும். விசேடமாக எதிரணியினர் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டால் சிறப்பாக செயற்பட முடியும் என்றே நினைக்கிறேன்.

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் சபையினரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இது அவ்வளவு எளிதில் முடியும் விளையாட்டல்ல. தற்போது கண்கட்டி வித்தையொன்றே நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நாட்டில் நீடித்தால் பயங்கரவாதிகளும் உசார் நிலையை அடைந்துகொள்வார்கள்.

இந்த பயங்கரவாதத்தை இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.

நாம் மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள். இந்நிலையில், மக்களை இயல்பு நிலைக்குத் திரும்புமாறு நாம் கோரமுடியாது. பாதுகாப்புத் தரப்பினர் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.