குர்ஆனை தடைசெய்யும் பொதுபல சேனாவின் கருத்துக்கு அ.இ.அ.பொ.ஊ.சங்கம் கண்டனம்..!!

புனித அல்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சாரதேரர் அண்மையில் முன்வைத்த கருத்துக்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் ஞானசார தேரரின் மேற்படி கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தின் முகாமைத்துவ சபைக் கூட்டம் சங்கத்தலைவரும், தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனை சணச மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் அல்குர்ஆனைத் தடை செய்தல் தொடர்பான கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானத்திற்கான பிரேரணையை சங்க ஆலோசகர் ஐ.எம்.இப்றாலெவ்வை முன்மொ

ழிந்தார்.

ஆலோசகர் இப்றாலெவ்வை குறித்த கண்டனத்தீர்மானத்திற்கான பிரேரனையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

இந்த நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததைத் தொடர்ந்து சற்றுமௌனித்திருந்த பொதுபல சேனா சிறுபான்மை மக்கள் மீதான, குறிப்பாக முஸ்லிம்கள் மீதான விசக் கருத்துக்களை மீண்டும் கக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது தமது இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னிறுத்தி கோரத்தாண்டவமாடிய பொது பல சேனாவின் விஷமத்தனங்கள் நல்லாட்சியிலும் தொடர இடமளிக்கப்பட்டிருப்பதுதான் கவலையளிப்பதாகவுள்ளது.

அல்–குர்ஆன்

விஷக்கருத்துக்களையும், முஸ்லிம்களுக்கெதிரான விஷமப் பிரசாரங்களையும் வழமையான பாணியில் முடுக்கிவிட்டுள்ள பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தமது உச்ச வெளிப்பாடாகப் புனித திருக்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் அமைதி, சமாதானம், சகவாழ்வை வலியுறுத்திக் கொண்டு உலகமக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவனால் அருளப்பட்ட பெரும் கொடையாக புனித குர்ஆன் மிளிர்கின்றது.

இம்மை, மறுமை

முழுமனித சமூகத்தினதும் இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்திற்கும், சுபீட்சத்திற்கும் நேர்வழிகாட்டும் புனித குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமெனக் கோருவது இந்நாட்டு முஸ்லிம்களின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. அல்–குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள் மறையாகும். அது இந்த உலகம் நிலைத்திருக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.

இலங்கை முஸ்லிம்களை மட்டுமன்றி உலக முஸ்லிம்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஞானசார தேரரின் இந்த விஷமக்கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் பெரும் விசனத்திற்குரியதுமாகும்.

அரசு மௌனம்

இந்த நிலையில் இனவாத, மதவாத செயற்பாடுகளுக்குத் துளியும் இடமளிக்க மாட்டோமென்ற உறுதியைத் தெரிவித்தும், சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டியும், அவர்களது ஏகோபித்த ஆதரவால் நாட்டில் மலர்ந்த நல்லாட்சி இப்புல்லுருவிகளின் கொட்டங்களை அடக்குவதில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.

எனவே இன்றைய நல்லாட்சியில் இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் இத்தகைய அமைப்புகள் மீதும், அதன் சூத்திர தாரிகள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவும் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனப் பிரேரணை மீது மேலும் பலரும் உரையாற்றியதுடன் கண்டனத் தீர்மானம் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார்.