இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான புதிய ஆட்சிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ண காந்தி இன்றைய நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறாகிவிட்டார். ஆனால், அவரது லட்சியத்துக்கு என்ன ஆனது? அதுவும் பழைய வரலாற்றுச் சம்பவமாகிவிட்டதா?- அல்லது தலைமறைவாகியிருந்து அந்த லட்சியம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமா?’ என்று கேள்வி எழுப்பினார் கோபாலகிருஷ்ண காந்தி.
‘பிரிவினைவாதம் என்பது உடனடியான நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறிவிடமுடியும். ஆனால், அந்த உணர்வு மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் வரையில் அது முற்றாக இல்லாமல் போய்விட்டதாக சொல்லமுடியாது’ என்றார் 2000-ம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் வெளியாகின்ற விமர்சனங்கள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு பேசினார்.
‘நாங்கள் நாட்டை இரண்டாக பிளவுபடுத்த போவதாகவும்..பௌத்த மதத்துக்கு உள்ள இடத்தை இல்லாமல் செய்யப்போவதாகவும்…வெளிநாட்டு ஆலோசனைகளின்படி பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர்’ என்றார் மைத்திரிபால சிறிசேன.
‘ஆனால் நீங்கள் சொல்வதை செய்வது எங்களின் முயற்சி அல்ல. உங்களுக்கு புரியாததை, உங்களுக்கு தெரியாததை செய்வது தான் எங்களின் நோக்கம் என்று அவர்களுக்கு நான் கூறுகின்றேன்’ என்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

160104101539_ranil_maithri_512x288_getty
அவர் முன்னர் அமைச்சராக இருந்த 2005-ம் ஆண்டு காலத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி அவரைக் கொலைசெய்ய முயன்றதாக தண்டனை அளிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.
பத்தாண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருந்த சிவராஜா ஜெனீபனை மேடைக்கு அளித்து ஜனாதிபதி விடுதலை செய்துவைத்தார்.
‘எங்களின் புதிய (அரசியலமைப்பு) யோசனையை ஆதரிப்பவர்களைப் போலவே எதிர்ப்பவர்களும் உள்ளனர். ஆனால், நல்லாட்சியை மனதில் வைத்து முன்னேறிச் செல்வதா அல்லது மக்கள் நிராகரித்த அந்த பழைய அரசியல்முறைக்குச் சென்று அந்த சேற்றுக்குழிக்குள் சிக்கியிருப்பதா என்பதைத் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி, ஜேவிபி ஆர்ப்பாட்டம்
இதனிடையே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பொது எதிரணிக் கூட்டணியினருடன் கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகள் சிலவும் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதேவேள கண்டி, அஸ்கிரிய-மல்வத்து பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்று திரும்பிய மகிந்த ராஜபக்ஷ, ‘அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார்.
ஜனாதிபதி தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருந்த ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணியினரும் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தலைநகரின் புறநகரான நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் கொலைகளை புரிந்தவர்களையும் கைதுசெய்வதில் ரணில்-மைத்திரி அரசாங்கம் மெத்தனப் போக்கில் இருப்பதாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக ஜேவிபி கூறுகின்றது.
இதனிடையே, புதிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும ஐநாவின் தலைவமைச் செயலாளர் பான் கி மூன் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.