பண்டாநாயக்கா- செல்வா அல்லது டட்லி- செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை அரசியல் சபையாக மாற்றுவது தொடர்பில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் பின் ஜனாதிபதி ஆற்றிய விஷேட உரையின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில்,

இன்றையதினம் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதற்காக, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிக்கபட்டது.

கடந்தகால அரசியலமைப்பு மாற்றங்களானது ஒரு சிலருக்கு சார்பாகவே கொண்டுவரப்பட்டது இதனால் தான் பல கசப்பான சம்பவங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டன.

அத்துடன் எமது நாட்டு மக்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கியதாலேயே 1931ஆம் ஆண்டு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது.

மேலும் நாம் கொண்டுவரப்போகும் புதிய யாப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த வேண்டுமே ஒழிய மக்களை பயமுறுத்தக் கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் பண்டாநாயக்கா-செல்வா அல்லது டட்லி-செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் என்றும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு,தெற்கு தீவிரவாதங்களை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன் சில அரசியல்வாதிகள் நாம் வெளிநாடுகளின் தேவைக்காகவே இந்த அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர முயல்வதாக அறிக்கை விடுகின்றனர்.

ஆனால் நாம் அவ்வாறு செயற்படவில்லை மாறாக எமது நாட்டில் உள்ள படித்த அறிஞர்களின் ஆலோசனைகள், உதவிகளைப் பெற்றே நாம் அரசியல் யாப்பில் மாற்றத்தைக கொண்டு வர உத்தேசித்தோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.