யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் காதல் தொல்லை கொடுத்து கிராமசேவகரை கடத்திய கும்பல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வரணி, இயற்றாலை, கலைவாணி வீதியை சேர்ந்த மேற்படி கிராமசேவகரை இன்று காலை 8.45 மணியளவில் அலுவலகத்திற்கு சகோதரனுடன் செல்லும் போது வழிமறித்து தாக்கிய கும்பல் ஒன்று குறித்த பெண் கிராமசேவகரின் பல்லை அடித்து உடைத்து விட்டு வெற்று பத்திரம் ஒன்றில் கையெழுத்து கேட்டுள்ளனர்.

எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஹயஸ் வாகனத்தில் குறித்த பெண்ணை மேற்படி மர்மக் கும்பல் கடத்தியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரத்தில் வைத்து மேற்படி கிராமசேவகரை பாதுகாப்பாக மீட்டதுடன், அவரை கடத்த பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 28, 23, 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் (கொடிகாமம் ஜே 343 கிராமசேவகர் பிரிவு கிராமசேவகர்) சேர்ந்த சிவகுரு கஸ்தூரி (23) என்ற கிராமசேவையாளரே கடத்தப்பட்டிருந்தாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 2 மாதங்களுக்கு முன்னர் காணி விடயம் தொடர்பாக இதே கிராமசேவகருடன் பேச வந்த குறித்த கடத்தல்காரர்கள் பின்னர் கிராமசேவகருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனடிப்படையிலேயே இந்த கடத்தல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
varany-gs
varany-gs01

varany-gs03