Gotabaya-Rajapaksa

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயமானது மிகப் பெரிய நகைசுவை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் வழிநடத்தலில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு எதிராக கையெழுத்தும் பெறும் நடவடிக்கையின் போது இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் தனது மதிப்பீட்டு அறிக்கையை சமர்பிக்கும் முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிய மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்காக தனியான நாட்டை உருவாக்க சுமார் 30 வருடங்கள் போரிட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு மே மாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை வந்துள்ள மனித உரிமை ஆணையாளரை சந்திக்க தமிழ்ப் போராளிகளின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் ஆட்சியாளர்களால் இடமளிக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு விட்டு இலங்கையின் நிலைமைகளை அவரால் புரிந்துகொள்ள முடியாது. அவரை ஒரு தரப்பினர் மாத்திரமே சந்திக்கின்றனர். இறுதிக்கட்டப் போரில் போர் குற்றங்கள் நடக்கவில்லை எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரின் இறுதி சில மாதங்களில் வடக்கில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இணக்கம் வெளியிட்டார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு போர் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களுடன் பேசிய அவர், தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான சட்டரீதியான செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டுமே தவிர அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடாது.

போர் குற்றம், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது பாரதூரமான குற்றங்களை செய்த நபர்களுக்கு மன்னிப்பு வழங்கும் பொது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் போதுமான சாட்சியங்கள் இல்லாதவர்களை விடுதலை செய்வதை ஐ.நா வரவேற்கிறது. சுமார் 200 தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் இந்த கைதிகளை நிபந்தனையின்றி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் அரசியல் மற்றும் சிவில் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.