மே தின பேரணிகளின் போது ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மே தின பேரணிகளின் போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் வகுக்கப்பட்ட பல கொள்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) மே தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட மே தின பேரணிகளின் போது குறிப்பாக ட்ரம்பின் குடியேற்றம் தொடர்பான கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கறுப்பு நிற ஆடையணிந்திருந்த சிலர் வீதிகளில் தீவைத்தும், ஜன்னல்களை கல்லெறிந்து உடைத்தும் பொலிஸாரின் வாகனங்கள் மீது பொருட்களை எறிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓக்லன்ட், கலிஃபோர்னியா மற்றும் நியூயோர்க் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட மே தினப் பேரணியின் போது சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.